குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு; 3 அமைச்சர்கள்; 5 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு; 3 அமைச்சர்கள்; 5 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு குறுவை சாகுபடிக்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் சேலம், கரூர் மாவட்டம் மாயனூர் வழியாக நேற்று மதியம் திருச்சி முக்கொம்புக்கு வந்தடைந்தது. அங்கு மாலை தண்ணீர் அப்படியே திறக்கப்பட்டு இன்று நண்பகல் கல்லணையை வந்தடைந்த காவிரி நீரை டெல்டா விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்க அமைச்சர்கள், ஆட்சியர்கள் திறந்து வைத்தனர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. வழக்கமாக ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி, கடந்த 12-ம் தேதி காலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், பின்னர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நேற்று கரூர் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்து, முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று மாலை காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. முக்கொம்புவில் இருந்து முதலில் 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, 2 ஆயிரம், 5 ஆயிரம், 7 ஆயிரம் கன அடி வீதம் இரவு தண்ணீர் திறக்கப்பட்டு இன்று நண்பகல் கல்லணையை காவிரி நீர் வந்தடைந்தது. முதல்வர் ஏற்கனவே சொன்னதுபோல் கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பினால் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள் காலை 10.30 மணிக்கே கல்லணை விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அதேபோல் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கல்லணைக்கு வந்திருந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தபாடில்லை. எப்படியும் வந்து விடும் என்பதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் காத்திருந்தனர். முக்கொம்புவில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் அதை அப்படியே திறந்து விட்டும் நண்பகல் 1 மணிக்குத்தான் கல்லணைக்கு தண்ணீர் எட்டிப்பார்த்தது. இதனால் ஆட்சியர்கள், அமைச்சர்கள் பிற்பகல் வரை காத்திருந்து குறைந்த அளவே எட்டிப்பார்த்த தண்ணீரை அப்படியே காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, உள்ளாறு போன்றவற்றில் திறந்து வைத்தனர். விவசாய சங்க பிரதிநிதிகளும் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்து காவிரி தாய்க்கு வழிபாடு நடத்தினர். முதலில் 500 கன அடி வீதம் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கின்றது. இது படிப்படியாக இரவு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திருச்சி உள்பட 12 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image