மேலப்பாளையம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க
அரசின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்
பொதுமக்கள் விருப்பம்
நெல்லை.
மேலப்பாளையம் மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்க அரசின் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
நெல்லை மாவட்டம் "மேலப்பாளையம்" மண்டலம் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. "கொரோனா" தொற்று என்கிற பெயரில் மேலப்பாளையத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளும், தெருக்களும் அடைக்கப்பட்டு காவல் துறையினரால் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மேலப்பாளையத்தில் அரசு அறிவித்து உள்ள அனைத்து நெறிமுறைகளும் முழுமையாகப் பின்பற்றப்படுவது இல்லை.
சான்றாக மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மேலப்பாளையத்தின் பல பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ள "நடமாடும் காய்கறி தொகுப்பு வாகனம்" இதுவரை ஒரு நாள் கூட வரவில்லை. கொரோனா கிரிமிநாசினி மேலப்பாளையத்தின் முக்கிய சாலைகளில் மட்டுமே தெளிக்கப்படுகிறது. ஊரின் உள் பகுதிகளில் உள்ள தெருக்களில் தெளிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த பதிலும் இல்லை; பலனும் இல்லை. ஆனால் "கொரோனாவை" காரணம் காட்டி கடுமையான கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்கின்றனர்.
மேலப்பாளையத்தில் உள்ள சிறிய அத்தியாவசியப் பொருள் கடையைக் கூட திறக்க அனுமதிப்பதில்லை. தெருக்களில் உள்ள சிறிய கடைகளைக் கூட திறக்க அனுமதிக்காததால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அல்லோலப்படுகிறார்கள். கடைகளை திறந்து வைப்பதற்கான நேரத்தையும் அரசு அறிவித்து போன்று மேலப்பாளையத்தில் பின்பற்றுவது இல்லை. மேலும் மேலப்பாளையத்தில் அத்தியாவசியப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ள வியாபாரிகளை மேலப்பாளையத்தில் நுழைய கூட அனுமதிப்பதில்லை. இதனால் ஏராளமான சிறு வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட மேலப்பாளையத்தில் ஆங்காங்கே உள்ள சிறிய அளவிலான அத்தியாவசியப் பொருள் கடைகளைத் திறக்க அனுமதித்தால் மக்கள் கூட்டத்தை கனிசமாக குறைக்க முடியும். அரசு அறிவித்து உள்ள "சமூக இடைவெளி-யையும்" முறையாகப் பின்பற்ற முடியும்.
மேலும் அரசு அனுமதி அளித்து உள்ள "தற்கால அங்காடியில்" விற்கப்படும் பொருட்களின் விலைக்கும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைக்கும் மிகவும் அதிகமான வேறுபாடுகள் உள்ளது. எனவே அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் கண்காணிக்க வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்பட்ட அங்காடி மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களை கடைக்காரர்களே வரிசைப்படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். பொதுமக்களை வரிசையில் நிற்க வியாபாரிகள் சொன்னால் பொதுமக்கள் கேட்கவும் மாட்டார்கள்.
ஆகவே, தற்கால அங்காடி மையம் மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முன்பு குறைந்தபட்ச காவலர்களை நிறுத்தி பொதுமக்களை வரிசைபடுத்த வேண்டும். அப்போது மட்டுமே தமிழக அரசு அறிவித்து உள்ள "சமூக இடைவெளியை" சரியாக நடைமுறைபடுத்த முடியும்.
எனவே, நெல்லை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் மேலப்பாளையத்தின் மீது வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்காமல் தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து நடைமுறைகளும் கட்டுப்பாடுகளின் மத்தியில் முறையாக, முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று மேலப்பாளையம் பொதுமக்கள் விரும்புகின்றனர்