நெல்லை மாநகரத்தில் அனுமதியின்றி "நடமாடும்" வாகனத்தில் காய்கறி விற்பனை செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
"கொரோனா" வைரசை தடுக்கும் நோக்கத்தோடு, கடைகளிலும், தற்காலிக சந்தைகளிளும் கூடும் மக்கள் கூட்டத்தை குறைக்கவும், சமூக இடைவெளியை ஏற்படுத்தவும் நெல்லை மாநகரத்தில் "நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி" செயல்படுத்தப்படுகிறது.
"நடமாடும் வாகன காய்கறி அங்காடி" நடத்த விரும்புகிறவர்கள், மாநகராட்சி ஆணையாளரிடம் அனுமதி பெற்று தான் வியாபாரம் செய்யவேண்டும். இதனை மீறி யாராவது அனுமதியின்றி சுயமாக நடமாடும் வாகனத்தில் வியாபாரம் செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
விலை வித்தியாசம்
நெல்லை மாநகரத்தில் "தற்காலிக காய்கறி விற்பனை அங்காடி"- யின் விலைப் பட்டியலுக்கும், "நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி"-யின் விலைப் பட்டியலுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
எனவே "உழவர் சந்தையில்" மாநகராட்சி அதிகாரிகளால் விலை நிர்ணயம் செய்தது போன்று, "தற்காலிக காய்கறி விற்பனை அங்காடி மற்றும் நடமாடும் வாகன காய்கறி அங்காடிக்கும்" மாநகராட்சி அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்து அதில் மாநகராட்சி முத்திரை மற்றும் சம்பந்தப்பட்டி அதிகாரிகள் கையொப்பம் இட்டு, ஒவ்வொரு அங்காடிக்கும் நகல் கொடுக்க வேண்டும். இதனை வியாபாரிகள் ஒரு அட்டையில் ஒட்டி தொங்கவிட வேண்டும்.
இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதை தடுக்க முடியும்- என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.