நெல்லை, தென்காசி -தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த
38 பேருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில்
"கொரோனா வைரஸ் " சிறப்பு சிகிச்சை
ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்
நெல்லை.
உலகெங்கிலும் அச்சத்தை உருவாக்கி உள்ள "கொரோனா வைரஸ்" தடுப்பு விழிப்புணர்வு பணிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். திருநெல்வேலியில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- "தற்பொழுது, மொத்தம் 38 பேர் "கொரோனா வைரஸ்" தொற்று அறிகுறிகளுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தனிப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களுள் 27 பேர் திருநெல்வேலி மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 7 பேர் நெல்லை மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து தலா இருவர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 95 சதவிகிதம் பேர், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள். எனவே, இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும், அவரவர் வீடுகளிலேயே, "தனிமை" படுத்தப்பட்டு, சுகாதார பணியாளர்களால், தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் 34 ஆயிரம் வீடுகளும், களக்காடு பகுதியில், 8 ஆயிரம் வீடுகளும், பத்தமடையில் 4 ஆயிரம் வீடுகளும், "கொரோனா வைரஸ்" தொற்று தொடர்பாக, "ஆய்வு" செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட உரிய நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், "கொரோனா வைரஸ்" தொற்று சிகிச்சைக்கான, "தனிப்பிரிவு" தயார் நிலையில் உள்ளது.
இது போல மருத்துவ வல்லுநர்கள், அனுபவமிக்க செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் என மொத்தம் 600 பேர்களைக் கொண்ட, மருத்துவக் குழுவினரும், தயாராக உள்ளனர். மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில், வழக்கம் போல தங்களுடைய, மருத்துவ சேவையினை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மூலம், நில வேம்பு குடிநீர், கபசுர மூலிகை குடிநீர் போன்றவை பொதுமக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகின்றன. வெளி ஊர்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு, அவசர மற்றும் அவசியப் பணிகளுக்காக, செல்வோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், "அனுமதிச்சீட்டு" வழங்கப்படுகிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான, மீதியுள்ள நாட்களிலும், மிகவும் "கவனமாக" இருந்து, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தெரிவித்தார்.