நெல்லை
"கொரோனா" நோயில் இருந்து முழுமையாக விடுபட அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் ஷில்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" என்ற கொடிய நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது.
நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" நோயை கட்டுப்படுத்த தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், பேட்டை, கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருவதுடன், அத்தியாவசிப் பொருட்களும் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் "கொரோனா" சிகிச்சை எடுத்து வருகிறவர்களில் பலர் பூரண சுகம் பெற்று அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். "கொரோனா" நோயில் இருந்து நெல்லை மாவட்ட மக்கள் பூரண நலம் பெற அனைத்து மக்களும் அரசின் விழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் மணிஷ் நாரனவரே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.