ஈரோடு: ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.50லட்சம் மக்களுக்கு கபசுப குடிநீர் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுப குடிநீர் நேற்று முதல் வழங்கப்பட்டது. இதனை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திட, கட்சியினர் அவர்களால் முடிந்த உதவியினை மக்களுக்கு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் நிலை குறித்தும், கட்சியினர் சார்பில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் தினந்தோறும் கேட்டறிந்து அடுத்த கட்ட பணிகள் குறித்து அறிவுரை கூறுகிறார். இந்த பணிகளைஅரசியலுக்கு அப்பாற்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைத்து அவர்களுடன் ஒருமனதாக பணி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, குறிப்பாக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். முதற்கட்டமாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், உணவின்றி தவிக்கும் மக்களுக்காக 5 டன் அரிசி மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒரு சில குறைகள் வருவது இயல்பு தான், அதுபோன்ற எங்களுக்கு வந்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.
திமுக.,வினர் சார்பில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுப குடிநீர் இன்று(நேற்று) முதல் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1.50லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடு வீடாக வழங்கப்படுகிறது. மக்களுக்கு நோய் தொற்று வரக்கூடாது என்பதற்காக கூட்டத்தை தவிர்க்க இந்த முறையில் வழங்கப்படுகிறது. மக்களிடம் கபசுப குடிநீருக்கு அதிக வரவேற்பு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் இன்னும் மூன்று நாளில் முழுவதுமாக வழங்கப்படும். மக்களுக்கு முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இதற்காக திமுக சார்பில் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஒரு லட்சம் முக கவசம் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க திமுக.,வினரான நாங்கள் கூட்டத்தை கூட்டுவதை தவிர்த்து, கட்டுக்கோப்பாக உள்ளோம். மக்கள், கட்சியினர் தங்களுக்கு என்ன கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோ அதனை முறையாக பின்பற்றி வீட்டில் இருக்க வேண்டும். அரசு வழங்கிய நிதி ரூ.1000 பற்றாக்குறை தான், கூடுதலாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்
ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.50லட்சம் மக்களுக்கு கபசுப குடிநீர் வழங்கப்பட்டது.