தூத்துக்குடி தற்காலிக காய்கறி கடைகளில் அலைமோதிய கூட்டம் : ஆட்சியர் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை முதலான அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்திட அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே நேரத்தில் கூட்ட நெரிசல் இல்லாதபடி உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியை பொறுத்தவரை, காமராஜர் காய்கனி மார்க்கெட் குறுகிய இடம் என்பதால், காய்கறி வாங்க வந்த மக்கள் இடைவெளி விட்டு நிற்க முடியாதபடி நெரிசல் உருவானது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மார்க்கெட்டின் வெளிப்புறத்திலுள்ள ஜெயராஜ் ரோடு மற்றும் தற்காலிக பழைய பேருந்து நிலையங்களில் தகுந்த இடைவெளி விட்டு, காய்கறி கடைகளை நடத்த ஏற்பாடு செய்தார். நேற்று தொடங்கிய இந்த காய்கறி சந்தை ஏப்ரல் 14-ம் தேதி வரை தற்காலிகமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கடைகளில் நேற்று காலை பொதுமக்கள் வரிசையாக, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தரையில் வரையப்பட்டு இருந்த வட்ட குறியீட்டில் நின்று காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அங்குள்ள மளிகை கடைகளிலும் அதுபோன்று வரிசையாக நின்று பொருட்களை வாங்கினர். அப்போது அங்கு வந்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பொதுமக்களை இடைவெளி விட்டு தள்ளி நின்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் கடைக்காரர்களும், பொதுமக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்
தூத்துக்குடி தற்காலிக காய்கறி கடைகளில் அலைமோதிய கூட்டம் ஆட்சியர் ஆய்வு