சேலம்
சுமூகமான மற்றும் விரைவான தீர்வுகளுக்கு சமரசமே சரியான வழி
சமரச மற்றும் நடுவர் மையத் துவக்க விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் உரை
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி வளாகத்தில் சமரச மற்றும் நடுவர் மையத்தின் (CEMA – WE SOLVE) துவக்கவிழா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா கலந்து கொண்டார்.
இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத் தலைவரும், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் செயலாளரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரசத் தீர்வு வல்லுனருமான வழக்கறிஞர் த.சரவணன் தலைமையுரை ஆற்றினார். இந்த சமரச தீர்வு மையத்தினை சேலத்தில் ஏற்படுத்துவதற்கு நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா மாபெரும் தூண்டுகோலாக அமைந்ததோடு மட்டுமின்றி பல்வேறு வழிகளில் வழிகாட்டி உதவி புரிந்தார் என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்த அவர் நம் நாட்டிலேயே கல்வி நிறுவனம் ஒன்றில் அதுவும் சட்டக் கல்லூரியில் இத்தகைய சமரச மையம் அமைந்திருப்பது இதுவே முதல்முறை என்று பெருமிதத்தோடு கூறினார். நாட்டின் மிக முக்கிய வழக்கான அயோத்தி வழக்கில் சமரசத் தீர்வு நடுவர்களாக செயல்பட்ட நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா அவர்களும், சர்வதேச சமரசத் தீர்வு நிபுணர் ஸ்ரீராம் பஞ்சு அவர்களும் ஒன்றாக இம்மையத்தை திறந்து வைத்தது தனிச்சிறப்பு எனக் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினரான நீதியரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தனது சிறப்புரையில் தற்போது சமரச மற்றும் நடுவர் தீர்வு மையங்கள்
மேலை நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது என்றும் இந்தியாவில் தற்போதுதான் இந்த முறை வளர்ந்து வருகிறது என்றும் கூறினார். பல்வேறு சிக்கலான வழக்குகள், குறிப்பாக குடும்ப உறவுகள் மற்றும் சொத்து பாகப்பிரிவினை வழக்குகள் போன்றவை இந்த சமரசத் தீர்வு முறையில் மிகவும் எளிதான வழியிலும், அதிகப் பொருள் செலவு இல்லாமலும் மற்றும் மிகவும் குறைவான காலத்திலும் தீர்த்து வைக்க உதவுகிறது என்று கூறிய அவர், சில வழக்குகளில் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இறுதியாக இந்த சமரசத் தீர்வு முறையை நாடி சுமூகமாக தீர்த்துக் கொண்ட அனுபவங்களைக் கூறினார். இந்த சமரசத் தீர்வு மையம் சிறப்பாகவும் அனைத்து வசதிகளுடனும் இருப்பதாக கூறினார்.
பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விரைவில் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அதன் பாடத்திட்டங்களில் “சமரசம் (MEDIATION)” என்பதை ஒரு பாடமாக அறிவிக்க இருக்கிறது. அதற்கான பாடத்திட்ட வடிவமைப்பாளராக வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச சமரசத் தீர்வு நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஸ்ரீராம் பஞ்சு இவ்விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, சமரசத் தீர்வு மையங்களின் இன்றைய இன்றியமையாத தன்மைப்பற்றி விளக்கிய அவர் இதுவரையில் தான் பார்த்த எத்தனையோ சமரசத் தீர்வு மையங்களிலேயே சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் அமைத்துள்ள இந்த CEMA சமரசத் தீர்வு மையமே அதன் உள்கட்டமைப்பிலும் வசதிகளிலும் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது எனப் பாராட்டி பேசினார்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்பிட்ரேசன் அன்ட் மீடியேசன்(IIAM) தலைவர் அனில் சேவியர் அவர்கள் சமரசத் தீர்வு முறையில் கடைபிடிக்கப்பட வேண்டிய பல்வேறு நுணுக்கங்கள் பற்றிக் கூறி சட்டம் படிக்கும் மாணவர்கள் அவற்றை அறிந்து கொள்ளும் வகையில் சட்டக் கல்லூரியிலேயே இந்த சமரசத் தீர்வு மையம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு என்று பேசினார். இந்தியாவிலேயே சமரசத் தீர்வு மையம் ஒன்று முதன் முறையாக ஒரு சட்டக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருப்பது இந்த சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் தான் என்று பாராட்டிப் பேசிய அவர் வரும்காலங்களில் சமரசத் தீர்வு முறையை கற்றுப் பயிற்சி செய்யும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகத் தெரிவித்தார். .
சர்வதேச சமரசத் தீர்வு நிபுணர் இன்ப விஜயன் தனது உரையில் சமரசத் தீர்வுமுறையின் பல்வேறு சிறப்புகளை கூறி, CEMA – WE SOLVE மையத்தின் ஒவ்வோர் அறைக்கும் அன்னை தெரசா, விவேகானந்தர், தலாய் லாமா, அப்துல் கலாம் போன்ற அமைதிக்கான தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது இன்னும் அதன் சிறப்பைக் கூட்டுவதாகக் கூறினார்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்பிட்ரேசன் அன்ட் மீடியேசன்(IIAM) இயக்குனர் இராம் மஜீத் தனது உரையில் இந்த சமரசத் தீர்வு முறையானது பல்வேறு உளவியல் பூர்வ வழக்குகளுக்கும் எளிதாக தீர்வு கண்டுள்ளது எனப் பேசினார். மேலும் சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் சமரசத் தீர்வு மையத்திற்கும் (CEMA – WE SOLVE) மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்பிட்ரேசன் அன்ட் மீடியேசன் (IIAM) க்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்விழாவில் எல்.எஸ்.சத்தியமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி, சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவர்களும், சேலம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவருமான குணவதி, குடும்பநல நீதிமன்ற மாவட்ட நீதிபதி பத்மா, முதன்மை மாவட்ட முன்சிப் அஸ்பக் அஹமது, கூடுதல் மாவட்ட முன்சிப் முகமது சுலைமான், நீதித்துறை நடுவர் செந்தில் குமார், சேலம் மாவட்ட வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த நீதிபதிகள், பேராசிரியர்கள், சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இவ்விழாவின் வரவேற்புரையை உதவிப் பேராசிரியை நிவேதப்பிரியா ஆற்றினார். நன்றியுரையை கல்லூரி முதல்வர் பேராசிரியர். பேகம் பாத்திமா நிகழ்த்தினார். இவ்விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.மாணிக்கம் செய்திருந்தார்.