சேலம் கன்னங்குறிச்சி மஹாலக்ஷ்மி நகரில் அமைந்துள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பு சார்பில், நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயலாக் குழந்தைகளின் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்புக் கருத்தரங்கை நடத்தியது.
இந்த நிகழ்வில், டிரஸ்டின் துணைச் செயலாளர் அ.ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீதேவி தொகுப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளரான டாக்டர்.மங்கையர்க்கரசி, சிறப்புக் குழந்தைகளுக்கான சரியான உடலமைப்பு குறித்த முக்கியத்துவம் பற்றி பேசினார். அப்போது அவர், "மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உடலமைப்பை ஒரு நார்மல் குழந்தையின் உடலமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களின் செயல்பாட்டுத்தன்மை குறைவான உடல் பகுதிகளை, பிசியோதெரபி பயிற்சிகள் மூலமாக நிச்சயமாக சரிப்படுத்த முடியும். ஒரு இயலாக்குழந்தை தானே தன்னந்தனியாக தன்னுடைய எல்லா வேலைகளையும் செய்து கொள்ள பழக்கப்படுத்துவது மட்டுமே நாம் அவர்களுக்கு செய்யும் நன்மை. மாறாக, பயிற்சிகளின்போது அவர்களின் அழுகையைக்கண்டு பயிற்சியை நிறுத்திவிட்டால் அவர்களின் சங்கடங்கள் ஆயுளுக்கும் தொடர்வதற்கான வாய்ப்புண்டு என்று பேசினார்.
சிறப்புக் குழந்தைகளுக்கான பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி நிபுணர் மனோஜ்குமார் பேசுகையில், ஒரு குழந்தை சராசரியாக மூன்று மாதங்களில் சிறுசிறு ஒலிகள் எழுப்பும். ஆறு மாதங்களில் ப, ம போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும்.. பேச முயற்சிக்கும், ஒரு வயதில் அப்பா, அம்மா என்று வார்த்தைகளாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்.
இவையெல்லாம் ஒரு நார்மல் குழந்தையின் அடையாளங்கள். ஆனால், இந்த சராசரி செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும்போது, அவர்களின் அடுத்தகட்ட செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளாகாமல் தடுக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த பயிற்சியளித்து சரிசெய்யவும் முடியும் என்று பேசினார்.
நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் நன்றியுரை பேசும்போது, "ஒரு குழந்தையை நல்ல முறையில் உருவாக்குவதில் சமுதாயத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. ஏனென்றால், தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு ஆட்டிசம் பாதிப்படைந்த குழந்தை என்கிற காரணத்தாலேயே, மூன்று மாதங்களிலேயே பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால், அவரின் தாயார் மேற்கொண்ட முயற்சிகளால் சமுதாயத்துக்கு பலனளிக்கும் விதமாக, ஒரு விஞ்ஞானியாக வளர்ந்து 1096 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்" என்று பேசினார்.
இந்நிகழ்வில் திரளான பொதுமக்களும், சிறப்புக் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும், சிறப்பாசிரியர்களும் பங்கேற்றனர். பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 